ரஷ்யா – உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு அரசியல் பிரச்னைகளுக்கு மத்தியில், ரஷ்யாவில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன், நேட்டோ கூட்டமைப்பில் இணைய முடிவு செய்தது. இதனால், ஆத்திரமடைந்த ரஷ்யா, கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது போர் தொடுத்தது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால், அதன் மீது அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் பல்வேறு தடைகளை விதித்துள்ளது.
இந்த போரினால் இரு நாடுகளும் பல்வேறு இழப்புகளைச் சந்தித்து வருகின்றன. எனினும், இரு நாடுகளும் தற்போது போரை தீவிரப்படுத்தி உள்ளது.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் தேர்தல் இன்று தொடங்கி உள்ளது. வாக்குப்பதிவு காலை 8.00 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மார்ச் 17 அன்று இரவு 9 மணிக்கு (உள்ளூர் நேரம்) வாக்குப்பதிவு முடிவடையும். வாக்காளர்களின் வசதிக்காக, 94 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த தேர்தலில், ரஷ்யாவின் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின், விளாடிஸ்லாவ் டாவன்கோவ், லியோனிட் ஸ்லட்ஸ்கி மற்றும் நிகோலாய் கரிடோனோவ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
முன்னதாக, ரஷ்ய அதிபர் தேர்தலுக்காக வெளிநாடுகளில் வாக்குப்பதிவு நடந்தது. இதில், 40 ஆயிரம் பேர் வாக்களித்துள்ளனர். இந்த தேர்தலில், ஐந்தாவது முறையாக அதிபர் விளாடிமிர் புதின் வெற்றி பெற்று பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.