திமுகவுக்கு வந்துள்ள தேர்தல் நிதியில் 87% தேர்தல் பத்திரங்கள் மூலம் வந்ததுதான் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் நடைப்பெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார். இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,
திமுக- காங்கிரஸ் செய்த தவறுகளை பிரதமர் மோடி இன்று குறிப்பிட்டார், கூட்டணி முடிவுகள் விரைவில் வெளியாகலாம். ஒரு கட்சிக்கு யார் வேண்டுமானாலும் நிதி வழங்கலாம்.
“இதில் மறைப்தற்கு ஒன்றுமே இல்லையே.. எல்லாமே வெளிப்படையாகத்தானே இருக்கிறது. தேர்தல் பத்திர விவகாரத்தில் பாஜக வெளிப்படியாக உள்ளது.
மம்தா பானர்ஜி கட்சி ஒரு மாநிலத்தில் ஆட்சியில் இருந்துகொண்டு ஆயிரம் கோடி ரூபாய் தேர்தல் நிதி பெற்றுள்ளது.
திமுக ஒரு மாநிலத்தில் இருந்து கொண்டு இவ்வளவு நிதி பெற்றுள்ளதே. நாங்கள் 18 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறோம். எத்தனை அரசாங்கத்தை நடத்துகிறோம்.. ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவுக்கு வந்துள்ள நிதி இவ்வளவு.
திமுக ஒரு மாநிலத்தில் ஆளும்போது எப்படி இவ்வளவு வந்தது? திமுகவுக்கு வந்துள்ள தேர்தல் நிதியில் 87% தேர்தல் பத்திரங்கள் மூலம் வந்ததுதான். அதை கேள்வி கேட்க வேண்டும்.
தேர்தல் பத்திர நிதியில் என்ன தவறு? முன்பு பெட்டியை தூக்கிக் கொண்டு வந்து நிதி கொடுப்பார்கள். அது வேண்டாம் என தேர்தல் பத்திர நிதி திட்டத்தை கொண்டு வந்தோம்.
இதைவிட சிறப்பாக செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறினால் அதற்கு முயற்சி எடுக்கிறோம். அரசு தான் முயற்சி எடுக்கவேண்டும்.
திமுகவுக்கு யாரெல்லாம் கொடுத்தார்கள்?: எங்களைப் பொறுத்தவரை மடியில் கனமில்லை, வழியில் பயம் இல்லை. ஒரு மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் திமுக எவ்வளவு நிதி பெற்றுள்ளது எனப் பாருங்கள்.
மம்தா பானர்ஜி நேற்று மருத்துவமனையில் போய் படுத்துக்கொண்டார். திமுகவுக்கு யாரெல்லாம் தேர்தல் பத்திரம் நிதி மூலம் கொடுத்திருக்கிறார்கள் என்று நோண்டிப் பாருங்கள். பாஜக எப்போதும் வெளிப்படைத்தன்மையை வரவேற்கும்” எனத் தெரிவித்தார்.