சென்னை கோவை இடையே கூடுதல் விமானங்கள் இயக்கப்படவுள்ளது.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து மிகப்பெரிய நகரம் கோவை. தென் இந்தியாவின் மான்செஸ்டர் என கோவை அழைக்கப்படுகிறது. இந்த மாவட்டத்தைச் சுற்றியுள்ள திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் பகுதிகளில் பெரிய பெரிய தொழிற்சாலைகளும், வணிக நிறுவனங்களும் உள்ளன. இதனால், இங்குள்ள தொழில் அதிபர்கள் பலர் வியாபார ரீதியாகச் சென்னைக்கு அடிக்கடி சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், கோவையில் இருந்து சென்னைக்கு எளிதாகப் பயணம் செய்யும் வகையில், கூடுதல் விமானங்களை இயக்க வேண்டும் என தொழில் அதிபர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று, கோவையில் இருந்து சென்னைக்குப் பயணம் செய்யும் வகையில் கூடுதல் விமானம் இயக்கப்பட உள்ளது.
அதாவது, மார்ச் 31-ம் தேதி முதல் கோவையில் இருந்து சென்னைக்குக் கூடுதலாக விமான சேவை இயக்கப்பட உள்ளது. அந்த வகையில், சென்னையில் இருந்து இரவு 9 மணிக்கும், கோவையில் இருந்து காலை 6.30 மணிக்கும் விமானம் இயக்கப்பட உள்ளது. இந்த விமானங்களை இண்டிகோ நிறுவனம் இயக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் மக்களவைத் தேர்தல் வர உள்ளதால், இந்த கூடுதல் சேவை பயனுள்ளதாக இருக்கும் எனக் கோவை தொழில் அதிபர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.