ராஜஸ்தானில் ராணுவ சீருடை விற்பனை கடை நடத்தி வந்த ஆனந்த் ராஜ் சிங், இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு பகிர்ந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, மும்பையில் இந்திய கடற்படைக்குத் தேவையான கப்பல் கட்டும் தளத்தில் பணியாற்றி வந்த கல்பேஷ் (31) என்பவர், கடற்படை தொடர்பான ரகசியங்களை பாகிஸ்தான் உளவுத்துறைக்கு கொடுத்ததற்காக, மார்ச் 11-ஆம் தேதி அவரை மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், இந்திய இராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு பகிர்ந்ததற்காக, ராஜஸ்தானில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில், ராணுவ ரகசியங்களை உளவு பார்த்ததற்காகவும், இந்திய ராணுவத்தின் ரகசிய தகவல்களை பாகிஸ்தானின் உளவுத்துறைக்கு பகிர்ந்த குற்றத்திற்காகவும் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து கூடுதல் காவல்துறை இயக்குநர் (உளவுத்துறை) சஞ்சய் அகர்வால் கூறியதாவது, 22 வயதான ஆனந்த் ராஜ் சிங் என்பவர், ராணுவத்தின் முக்கியத் தகவல்களை சேகரித்து, பாகிஸ்தான் உளவுத்துறையின் மூன்று பெண்களுடன் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர் ஸ்ரீகங்காநகரில் உள்ள சூரத்கர் ராணுவ கன்டோன்மென்ட்டுக்கு வெளியே, ராணுவ சீருடை கடை நடத்தி வந்தார். தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கூறினார்.