மக்களவைத் தேர்தலில், பணப் பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறையினர் கண்காணிப்பார்கள் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, டெல்லியில், தேர்தல் நடைமுறைகள் மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து செய்தியாளர்களுக்குத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், வாக்குச் சாவடிகளில் வாக்காளர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள், மது விநியோகம் செய்யப்படுவது குறித்து தீவிரமாகக் கண்காணிக்கப்படும். வேட்பாளரோ அல்லது அரசியல் கட்சிகளோ வாக்குக்கு பணமோ அல்லது பொருளோ கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்தலில் பணப் பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத் துறை மற்றும் வருமானவரித் துறையினர் கண்காணித்து அதன் மீது நடவடிக்கை எடுப்பார்கள். ஒவ்வொரு வேட்பாளர்கள் பற்றியும் செயலிகள் மூலம் மக்கள் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும்.
வன்முறை இல்லாத தேர்தல் நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ட்ரோன மூலம் மாநில எல்லைகள் முழுவதுமாக கண்காணிக்கப்படும். நாடு முழுவதும் சோதனைச் சாவடிகள் மூலமாகவும் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தலில் சமூக விரோதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வங்கிகள் வாகனங்களில் பணம் எடுத்துச் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முழுவதுமாகக் கண்காணிக்கப்படும்.
சமூக வலைதளங்களில் அரசியல் கட்சியினர் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அரசில் கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் பரப்புரையில் கண்ணியத்துடன் ஈடுபட வேண்டும். சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்யலாம். ஆனால் போலிச் செய்திகளைப் பரப்பக்கூடாது.
குறிப்பாக, மதரீதியாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ விமர்சித்து அரசியல் தலைவர்கள் அல்லது தனி நபர்கள் பரப்புரையில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
விளம்பரங்களை நம்பத்தகுந்த செய்தியாக்க முயற்சிக்கக் கூடாது. குறிப்பாக, தேர்தல் பரப்புரையில் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை ஈடுபடுத்தவே கூடாது.
நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததுவிட்டால், அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் மேலும் விதிக்கப்படும் என உறுதிப்படத் தெரிவித்தார்.