கோவை சித்தாபுதூர் பகுதியில் பாஜக அலுவலகத்தில், தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், பிரதமர் மோடியின் கோவை வருகை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். பிரதமர் மோடியின் ரோடு ஷோ, பிரமாண்ட முறையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை மாலை 5.30 மணிக்கு சாய்பாபா காலணி பகுதியில் துவங்கும் பேரணி 3 கி.மீ-க்கு அப்பால் ஆர்.எஸ்.புரம் பகுதியில் நிறைவடைகிறது.
பிரதமர் மோடியின் வருகையின்போது பராம்பரிய பொருட்கள் கண்காட்சி அமைக்கப்படும். முக்கிய இடங்களில் மேடை அமைத்து சமுதாய தலைவர்கள் மற்றும் பயனாளிகளை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு பொது மக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. எனவே, அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம். யாருக்கும் எந்த கட்டுப்பாடும் கிடையாது. இதற்கென தனியாக பாஸ் கிடையாது. இந்நிகழ்ச்சிக்கு வரும் பொதுமக்கள் 2 மணிக்கு முன்பு வந்து சேர வேண்டும் அவ்வளவுதான் என்றார்.
தொடர்ந்து பேசியவர், பிரதமருக்கு தேர்தல் தேதி தெரிந்ததால் தான், தமிழகத்திற்கு முன்பே வருவதாக சொல்கிறார்கள். தேர்தல் முன்பே தோல்வியை எதிர்க்கட்சியினர் ஒப்புக்கொண்டுள்ளனர்.
பிரதமர் மோடியை தரக்குறைவாக 28 பைசா என அழைப்போம் என்றால், ஜாபர் சாதிக் கூட தொடர்பில் இருந்த உதயநிதியை ட்ரக் உதயநிதி என அழைக்கலாமா? என ஆவேசமானார்.