பாகிஸ்தானில் பாதுகாப்புச் சோதனை சாவடி மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில், 7 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு பல்வேறு தீவிரவாத அமைப்கள் செயல்பட்டு வருகிறது. இந்த தீவிரவாத அமைப்புகள், அண்டை நாடுகளுக்குள் புகுந்து பல்வேறு அசம்பாவித சம்பவங்களை செய்து வருகின்றன. மேலும், பாகிஸ்தானின் இராணுவ வீரர்களையும், மக்களையும் குறிவைத்து சில தீவிரவாதி தாக்குதலையும் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தானில் உள்ள பாதுகாப்புச் சோதனைச் சாவடியில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தி உள்ளனர். வஜிரிஸ்தானில் உள்ள சோதனைச் சாவடியை நோக்கி சென்ற தீவிரவாதிகள் மீது இராணுவ வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால், இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.
அப்போது, தீவிரவாதிகள் சிலர் திடீரென வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனத்தை சோதனைச்சாவடி மீது மோதி வெடிக்க வைத்தனர். மேலும், தற்கொலை தாக்குதலும் நடத்தப்பட்டது. இதனால், சோதனைச்சாவடியின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 2 அதிகாரிகள் உட்பட 7 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். துப்பாக்கி சண்டையில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு, புதிதாக தொடங்கப்பட்ட ஜெய்ஷ்-இ-பர்சன்-இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.