ஐஸ்லாந்தில் உள்ள எரிமலை மீண்டும் வெடித்து சிதறியது. கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து 4-வது முறையாக வெடித்துள்ளது.
ஐஸ்லாந்தில் ஏராளமான எரிமலைகள் செயல் நிலையில் உள்ளன. கடந்த சில நாட்களாக, கிரின்டாவிக் நகரில் உள்ள எரிமலை சீற்றத்துடன் காணப்பட்டது.
இந்நிலையில், அந்த எரிமலை நேற்று திடீரென வெடித்து சிதறியது. அப்போது, அதில் இருந்து, அதிகளவில் தீப்பிழம்புகள் வெளியேறின. சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு நெருப்பு குழம்பு சென்றது. எரிமலையில் இருந்து வெளிப்பட்ட புகை விண்ணை முட்டும் அளவுக்கு பரவியது.
முன்னதாக, எரிமலை வெடிப்பு குறித்து அந்நாட்டு வானிலை மையம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. தொடர்ந்து, அப்பகுதியில் இருந்த மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்த எரிமலை கடந்த டிசம்பர் மாதம் முதல் 4-வது முறையாக வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.