அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து வந்த இந்திய மாணவர், மர்ம நபர்களால் கொல்லப்பட்டுள்ளார். இவருடைய உடல் வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பருச்சூரி சக்ரதர். இவருடைய மனைவி ஸ்ரீலட்சுமி. இந்த தம்பதிக்கு அபிஜித் என்ற மகன் உள்ளார். அபிஜித் சிறுவயது முதலே நன்றாக படிக்கக்கூடிய மாணவர் என்று கூறப்படுகிறது.
இவர் தனது மேற்படிப்பை அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க விரும்பி உள்ளார். இதற்கு முதலில் மறுப்பு தெரிவித்த பெற்றோர், பின் மகனின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அபிஜித் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் சேர்ந்து படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் மர்ம நபர்கள் சிலரால் அபிஜித் கொலை செய்யப்பட்டுள்ளார். இவருடைய உடல் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த இந்த சம்பவம், அமெரிக்க போலீசாருக்கு, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மகன் கொல்லப்பட்டதை அறிந்த அபிஜித்தின் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர்.
அமெரிக்காவில் அனைத்து சட்ட வேலைகளுக்குப் பின்னர் மாணவரின் உடல் சொந்த ஊரான குண்டூர் மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.