மகாராஷ்டிரா மாநிலம் காட்சிரோலி பகுதியில், போலீசார் நடத்திய என்கவுன்டரில், 4 மாவோயிஸ்ட்டு சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர், ஒடிசா, தெலுங்கானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு சில பகுதிகளில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இவர்களை ஒடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மாவோயிஸ்ட்டுகள் மறைந்திருந்து அவ்வப்போது, போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இதை அடுத்து பாதுகாப்புப் படையினர் பதிலடி தாக்குதல் நடத்துகின்றனர். இதில், இரு தரப்பிலும் உயிர் சேதம் ஏற்படுகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் காட்சிரோலி மாவட்டத்தில் மாவோயிஸ்ட்டுகள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், விரைந்து சென்ற போலீசார் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்டுகள், போலீசாரை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர். இதை அடுத்து, போலீசாரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், 4 மாவோயிஸ்ட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பின்னர், அவர்களிடம் இருந்து ஏகே-47 துப்பாக்கி, இரண்டு நாட்டு துப்பாக்கிகள் மற்றும் வெடி பொருட்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.
உயிரிழந்த மாவோயிஸ்ட்டுகள் வர்கீஸ், மக்து, ஆகிய இருவரும் வெவ்வேறு மாவோயிஸ்ட்டு அமைப்பை சேர்ந்த செயலாளர்கள். மற்ற இருவரும் மாவோயிஸ்ட்டு அமைப்பைச் சேர்ந்த குர்சங் ராஜு மற்றும் வெங்கடேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.