அமலாக்கத்துறை தன்னை கைது செய்யக்கூடாது என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் முன் வைத்த கோரிக்கையை டில்லி நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கலால் கொள்கை முறைகேட்டில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு இருப்பது தொடர்பான குற்றச்சாட்டில், விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு 8 முறை அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.
ஆனால் விசாரணைக்கு கெஜ்ரிவால் ஆஜராகததால் டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. மார்ச் 16 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இதனைத்தொடர்ந்து ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி அவர் ஜாமீன் பெற்றார்.
இதனைத்தொடர்ந்து மற்றொரு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இந்நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், விசாரணைக்கு ஆஜரானால் கைது செய்யக்கூடாது என அமலாக்கத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் சுரேஷ் குமார் கைட் மற்றும் மனோஜ் ஜெயின் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்டோம். தற்போதைய நிலையில் மனுதாரருக்கு எந்த நிவாரணமும் கொடுக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
எனினும் கெஜ்ரிவாலின் புதிய மனுவுக்கு பதிலளிக்குமாறு அமலாக்க இயக்குநரகத்திற்கு (ED) உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஏப்ரல் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இதனிடையே அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்துவதற்காக அவரது இல்லத்திற்கு அமலாக்கத்துறையினர் விரைந்துள்ளனர்.