டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
கலால் கொள்கை முறைகேடு தொடர்பாக விசாணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை சம்மன் 8 முறைஅனுப்பியது. ஆனால் விசாரணைக்கு கெஜ்ரிவால் ஆஜராகததால் டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. பின்னர் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கெஜ்ரிவால் ஜாமீன் பெற்றார்.
இதனைத்தொடர்ந்து மீண்டும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இந்நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், விசாரணைக்கு ஆஜரானால் கைது செய்யக்கூடாது என அமலாக்கத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் தற்போதைய நிலையில் மனுதாரருக்கு எந்த நிவாரணமும் கொடுக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. பின்னர் வீட்டில் இருந்து விசாரணைக்காக அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு அவர் அழைத்து செல்லப்பட்டார்.
இன்றைய விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படலாம் என தெரிகிறது. அப்போது அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துரை தரப்பில் மனு தாக்கல் செய்யலாம் என தெரிகிறது.