ஒலிம்பிக் தொடக்க விழா அணிவகுப்பில் இந்திய அணிக்குத் தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல் தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏந்தி செல்வார் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வன இந்த ஒலிம்பிக் போட்டியில் 200 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
இந்த போட்டியின் தொடக்க விழாவை செயின் நதியின் நடத்தப் போட்டி அமைப்பாளர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள். அதேபோல் இந்த தொடக்க விழாவின் முக்கிய அம்சமான வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு படகில் நடைபெறவுள்ளது.
இதில் ஒவ்வொரு நாட்டு வீரர், வீராங்கனைகளும் படகில் 6 கிலோமீட்டர் தூரம் ஈபிள் கோபுரம் நோக்கிப் பயணிக்க உள்ளனர்.
45 நிமிடங்கள் இந்த அணிவகுப்பு நடைபெற உள்ளது. ஒலிம்பிக் வரலாற்றில் தொடக்க விழா மைதானத்திற்கு வெளியே நடக்க இருப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்நிலையில் ஒலிம்பிக் தொடக்க விழா அணிவகுப்பில் இந்திய அணிக்குத் தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல் தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏந்தி செல்வார் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய 41 வயதான சரத்கமல், “இது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கெளரவம். இது எனது 5-வது மற்றும் கடைசி ஒலிம்பிக் போட்டியாக இருக்கப்போகிறது. இத்தகைய கெளரவம் டேபிள் டென்னிசில் நிறைய வீரர்களுக்குக் கிடைத்ததில்லை” என்று கூறினார்.
அதேபோல், ஒலிம்பிக் போட்டிக்கான இந்தியக் குழுவின் தலைவராக முன்னாள் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.