அரவிந்த் கெஜ்ரிவால் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், எந்த உத்தரவும் பிறப்பிக்காமல் டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
டெல்லி கலால் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்க அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்தனர். பின்னர் அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். இதனைத்தொடர்ந்து இன்று ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
டெல்லி முதல்வர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சார்பாக மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வியும், மத்திய புலனாய்வு அமைப்பு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் (ஏஎஸ்ஜி) எஸ்வி ராஜு மற்றும் சிறப்பு வழக்கறிஞர் ஜோஹெப் ஹொசைன் ஆகியோர் ஆஜராகினர்.
குற்றத்தின் மூலம் கிடைத்த வருமானம் 100 கோடி ரூபாய் என்றும், ரூ. 45 கோடி ஹவாலா மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும், அந்தப் பணம் கோவா தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் எஸ்வி ராஜு வாதிட்டார். முறைகேடாக ஈட்டிய பணம் சென்னையில் இருந்து டில்லிக்கு வந்துள்ளது.பின்னர் கோவாவுக்கு சென்றுள்ளது.
இந்த வழக்கின் மூளையாக அரவிந்த் கெஜ்ரிவால் செயல்பட்டதாகவும், எனவே 10 நாட்கள் விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, எந்த உத்தரவும் பிறப்பிக்காமல் விசாரணையை ஒத்திவைத்தார்.