2024 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்களை வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் நேற்று தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்துகொண்டுள்ளன.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 173 ரன்களை எடுத்தது.
இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டுப்ளசிஸ் மற்றும் விராட் கோலி ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். டுப்ளசிஸ் அடித்த பந்துகள் பௌண்டரி லைனை தாண்டி சென்றது. இதனால் அந்த அணியின் ஸ்கோரும் உயர்ந்துகொண்டு வந்தது.
அப்போது சிஎஸ்கே அணியின் இளம் வீரரான முசுத்தாபிசூர் ரகுமான் வீசிய பந்தை ஓங்கி அடித்த டுப்ளசிஸ் அந்த பந்து நேராக ரச்சின் ரவீந்திரா கைக்கு சென்றது. இதனால் 5 வது ஓவரில் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ரஜத் படித்தார் டக் அவுட் ஆகா அவரை தொடர்ந்து களமிறங்கிய கிளென் மாக்சுவெல் டக் ஆனார்.
பின்னர் சிறப்பாக விளையாடி வந்த விராட் கோலி 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து வீரர்கள் ஆட்டமிழந்து கொண்டே வர 15 வது ஓவரில் களமிறங்கிய தினேஷ் கார்த்தி , அனுஜ் கூட்டணி சிறப்பாக விளையாடி அணிக்கு ரன்களை குவித்து வந்தனர்.
20 ஓவர்கள் முடிவில் தினேஷ் 38 ரன்களும், அனுஜ் 48 ரன்களும் எடுத்தனர். சென்னை அணியில் அதிகபட்சமாக முசுத்தாபிசூர் ரகுமான் 4 விக்கெட்களை வீழ்த்தினார். அதேபோல் தீபக் சஹர் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
இதை தொடர்ந்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலகுடன் களமிறங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்த அணியின் தொடக்க வீரராக ருத்ராஜ் முதல் பந்தையே பௌண்டரியாக அடித்து தொடக்கி வைத்தார். அவருடன் களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா தனது அதிரடியான ஆட்டத்தை ஆரம்பித்தார். பின்னர் 4வது ஓவரில் ருத்ராஜ் 15 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அதேபோல் ரச்சின் ரவீந்திரா 7 வது ஓவரில் 36 ரன்களை எடுத்து அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய ரஹானே 27 ரன்களில் வெளியேறினார்.
பின்னர் களமிறங்கிய மிச்சேல் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, சிவம் துபே 34 ரன்களும், ஜடேஜா 25 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களை எடுத்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது 4 விக்கெட்களை வீழ்த்திய முசுத்தாபிசூர் ரகுமானுக்கு வழங்கப்பட்டது.