நாடாளுமன்ற தேர்தலில் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக அமர் பிரசாத் ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் தொகுதிகளின் விவரங்கள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அண்மையில் வெளியிட்டார்.
இதில், 19 தொகுதிகளில் பாஜக தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறது. மற்ற தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுகின்றன. அந்த வகையில், திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.
மேலும், புதிய நீதிக்கட்சி வேலூர் தொகுதியிலும், இந்திய ஜனநாயகக் கட்சி ( ஐஜேகே ) பெரம்பலூர் தொகுதியிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தென்காசி தொகுதியிலும் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றன. மொத்தம் 23 வேட்பாளர்கள் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளனர்.
பாஜக அணியில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
பாட்டாளி மக்கள் கட்சி காஞ்சிபுரம், அரக்கோணம், தருமபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமாகா ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. அமமுகவுக்கு திருச்சி, தேனி ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அக்கட்சி வேட்பாளர்கள் குக்கர் சின்னத்தில் போட்டியிட உள்ளனர்.
இந்த நிலையில், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக அமர் பிரசாத் ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக, அமர்பிரசாத் ரெட்டி தமது எக்ஸ் பதிவில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையால், மாநிலம் முழுவதும் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
I have been appointed as an Incharge for Thalaivar @annamalai_k Avls State Wide Loksabha Election Campaign. pic.twitter.com/JIwZXuc4sb
— Amar Prasad Reddy ( MODI FAMILY) (@amarprasadreddy) March 23, 2024