மோடிதான் மீண்டும் பிரதமர் என்ற பதற்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏதேதோ பேசி வருவதாக பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட இண்டிகூட்டணி தலைவர்களுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். மழை, வெள்ள பாதிப்பின் போது யார் தங்களுக்கு உதவியது என்பது மக்களுக்கு நன்றாக தெரியும் என்றும் கூறியுள்ளார்.
முரசொலியை மட்டும் படிப்பவர்கள் வேண்டுமானால் ஸ்டாலின் சொல்வதை நம்பலாம் என்றும், ஆனால் அதனை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தந்தை-மகன்-பேரன் என கட்சித் தலைவர், முதலமைச்சர் பதவியை அபகரிக்கும் ஒரு கட்சிக்கு, மற்ற கட்சிகளை பாசிச கட்சி எனக் கூற எந்த உரிமையும் இல்லை என்றும் அவர் கூறினார்.
ஜூ4-ம் தேதி பிரதமர் மோடி தூக்கத்தை தொலைக்கப் போகிறார் என ஸ்டாலின் பேசியுள்ளதை சுட்டிகாட்டியுள்ள வானதி சீனிவாசன், ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு ஸ்டாலின் மட்டுமல்ல, இண்டி கூட்டணியில் உள்ள தலைவர்கள் தங்களது தூக்கத்தை தொலைக்கப் போகிறார்கள் என்றும் தெரிவித்தார்.