சபரிமலை ஐயப்பன் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா கடந்த 16-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான ஆராட்டு விழா நாளை நடைபெறுகிறது.
உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், கடந்த 16-ஆம் தேதி பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது.
விழாவை முன்னிட்டு, தினந்தோறும் வழக்கமான பூஜைகளுடன் உத்சவ பலி, படிபூஜை நடைபெற்று வந்தது. திருவிழாவின் 9-ஆம் நாளான இன்று இரவு 9 மணிக்கு சரம்குத்தியில் பள்ளி வேட்டை நடைபெறும். இதன் பின், திங்கட்கிழமை பம்பை ஆற்றில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு, திங்கட்கிழமை காலை 8.00 மணிக்கு ஐயப்ப விக்ரகம் தாங்கிய அலங்கரிக்கப்பட்ட யானை ஊர்வலம் மேள, தாளம் முழங்க கோவிலில் இருந்து புறப்படுகிறது. இந்த ஊர்வலம் காலை 11.00 மணியளவில் பம்பை வந்து சேரும்.
இதனைத் தொடர்ந்து, பம்பை நதிக்கரையில் அலங்கரிக்கப்பட்டுள்ள ஆராட்டு கடவில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெறும். இந்த சடங்குகளை கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு நிறைவேற்றுவார்.
இதன் பின்னர், ஐயப்ப பக்தர்களின் தரிசனத்திற்காக ஐயப்ப விக்ரகம் பம்பை கணபதி கோவிலில் வைக்கப்படும். இரவு சுவாமி சன்னிதானம் சென்றதும் கொடி இறக்கப்பட்டு, உற்சவம் நிறைவு செய்யப்படும். இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடி கோவில் நடை அடைக்கப்படும்.