அசாம் மாநிலம் பிஸ்வநாத் பகுதியில், வாகன சோதனையின் போது, சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சுமார் 124 லிட்டர் மதுவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 7 கட்டங்களாக நடத்தப்படும் தேர்தலில், பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்பட உள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது.
இதன் காரணமாக, நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், நகை உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்கின்றனர்.
இந்த நிலையில், அசாமில் வாகன சோதனையின் போது சிக்கிய சுமார் 124 லிட்டர் மதுவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அசாம் மாநிலம் பிஸ்வநாத் மாவட்டத்தில் போலீசார் மற்றும் பறக்கும் படையினர் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கார் மற்றும் பைக்கில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஏராளமான இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபானங்கள் சிக்கியது. 14 அட்டைப் பெட்டிகளில், சுமார் 124 லிட்டர் மதுவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், நான்கு சக்கர வாகனம் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். சட்டவிரோதமாக மதுவை எடுத்து வந்த ஒரு பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.