நாடாளுமன்றத் தேர்தலுக்கான 6-வது கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டுள்ளது.
543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் சுமார் 97 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான 3 பேர் கொண்ட ஆறாவது கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் தௌசா தொகுதியில் கன்ஹையா லால் மீனாவும், கரௌலி-தோல்பூர் தொகுதியில் இந்து தேவி ஜாதவும் பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தானில் 25 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல்கட்டமாக (ஏப்ரல் 19) 12 தொகுதிகளுக்கும், மீதமுள்ள 13 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக (ஏப்ரல் 26ம் தேதி) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதேபோல் இன்னர் மணிப்பூர் மக்களவைத் தொகுதியில் தோனோஜாம் பசந்த குமார் சிங் பாஜக வேட்பாளராக அறிவிக்ப்பட்டுள்ளார். மணிப்பூரில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதியும், 2-வது கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26-ம் தேதியும் நடைபெற உள்ளது.
2014 மக்களவைத் தேர்தலில் பாஜக 282 இடங்களை வென்றது. காங்கிரஸ் 44 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. 2019 மக்களவைத் தேர்தலில், பாஜக 303 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் 52 இடங்களை மட்டுமே பெற முடிந்தது.