2024 ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு மோத உள்ளன.
2024-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. இந்த ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஐபிஎல் போட்டி நடந்து வருகிறது.
இந்நிலையில், 7-வது லீக் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில், நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோத உள்ளன.
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் முதல் லீக் போட்டியில், நடப்பு சாம்பியன் சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. உள்ளூரில் நடந்த முதல் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணி, மீண்டும் வெற்றி பெறும் முனைப்புடன் களம் இறங்க உள்ளது.
இதேபோல், குஜராத் அணி தனது சொந்த மண்ணில் நடந்த முதலாவது போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய உற்சாகத்துடன் இந்த போட்டியில் மோத உள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில், குஜராத் அணி 3 முறையும், சென்னை அணி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
இரண்டாவது வெற்றியை ருசிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கடுமையாக போராடும் என்பதால், இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.