டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஈஷா மையத்தின் நிறுவனர் சத்குரு வேகமாக குணமடைந்து வருகிறார். அவர் செய்தித்தாள் படிப்பது போன்ற வீடியோ அவருடைய எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கோவை ஈஷா மையத்தின் நிறுவனரும், ஈஷா அறக்கட்டளையின் தலைவருமான சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு சில நாட்களுக்கு முன், கடுமையான தலைவலி ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் புதுடெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய மூளையில் திடீரென ரத்தக் கசிவு ஏற்பட்டது தெரியவந்தது.
இதனால், அவருக்கு கடந்த 17-ஆம் தேதி மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சத்குருவின் உடல்நிலை குணமடைந்து வருவதாக, அறுவை சிகிச்சைக்கு தலைமை தாங்கிய அப்பல்லோ மருத்துவமனையை சேர்ந்த டாக்டர். வினித் சூரி தெரிவித்தார்.
இந்த நிலையில், சத்குரு தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அறுவை சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் குணமடைந்து வரும் சத்குரு செய்தித்தாள் ஒன்றை கையில் வைத்து, படித்தபடி இருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அவர் விரைவில் குணமடையவும் என்ற ஹேஷ்டேக் போடப்பட்டுள்ளது.