பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக, சென்னை உட்பட 5 இடங்களில், இன்று காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பிரபல ராமேஸ்வரம் கஃபே-யில் கடந்த 1-ஆம் தேதி அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்பில் 10 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பான வழக்கில், தேசிய புலமை முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 2 தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருப்பது உறுதியானது. இவர்கள் சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு மாதத்திற்கும் மேலாக தங்கி இருந்து சதி திட்டம் தீட்டி வந்துள்ளனர். குண்டு வெடிப்பு குற்றவாளிகள் இருவரும் சென்னையில் பல்வேறு இடங்களுக்கு சென்றிருப்பதும் தெரிய வந்துள்ளது.
குண்டு வெடிப்பு தொடர்பாக, கர்நாடகத்தின் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் தமிழகத்தில் இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை மண்ணடி உட்பட 5 இடங்களில் சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.