பிரதமர் மோடி குறித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவதூறாகப் பேசிய விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
கடந்த 22-ம் தேதி உடன்குடி அடுத்த தண்டுபத்து கிராமத்தில் திமுக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் அனிதா கிருஷ்ணன் பிரதமர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தகவல் வெளியானது. இதுதொடர்பான வீடியோவும் வெளியானது.
இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவர் ஆர்.சித்ராங்கதன், மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்துள்ளார். இதனிடையே பாஜக மாவட்டத் தலைவர் சித்ராங்கதன் மெஞ்ஞானபுரம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கை அளித்துள்ளார். திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார்.