PSLV-C58 ராக்கெட்டின் போயம்-3 இயந்திரத்தின் ஆய்வுப் பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவு பெற்றதை அடுத்து, பூமிக்கு மீண்டும் திருப்பி கொண்டுவரப்பட்டதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, கடந்த ஜனவரி 1-ஆம் தேதி PSLV-C58 ராக்கெட் மூலமாக, ‘எக்ஸ்போசாட்’ என்ற செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. மொத்தம், 469 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள், பூமியில் இருந்து, 650 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புவி சுற்று வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
இந்த செயற்கைக்கோள், வானியல் நிகழ்வுகள், விண்வெளியில் காணப்படும் நிறமாலை, தூசு, செயலில் உள்ள விண்மீன் கருக்கள், மேகக்கூட்டங்கள் உள்ளிட்டவை தொடர்பான தகவல்களை வழங்கி வருகிறது.
இதுதவிர எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட பிறகு, ராக்கெட்டின் நான்காம் நிலையான போயம்-3 இயந்திரமானது 350 கிலோமீட்டருக்கு கீழே கொண்டுவரப்பட்டது. அதில் உள்ள ஆய்வுக் கருவிகள் மூலம் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. போயம்-3 மூலம் கிடைத்த தரவுகள் எதிர்கால திட்டங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், போயம்-3 ஆய்வுப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 21-ஆம் தேதி மதியம் 2:04 மணிக்கு அதன் நிலை இறக்கப்பட்டு, பசிபிக் பெருங்கடலில் விழ வைக்கப்பட்டது. இதன் மூலம், விண்வெளிக் கழிவுகளே இல்லாத ஆய்வுத் திட்டமாக இது முன்னெடுக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.