மாற்றுத் திறனாளி வாக்காளர்களுக்காக ‘‘சாக்ஷம்’ என்ற பெயரில் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 7 கட்டங்களாக நடத்தப்படும் தேர்தலில், பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.
இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம், கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு செயலிகள் மூலம் வாக்காளர்கள், வேட்பாளர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், ‘சுவிதா’ என்ற ஒரு செயலி வேட்பாளர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்வது, வேட்புமனுவின் நிலை குறித்து அறிந்து கொள்வது, பிரச்சாரத்துக்கான அனுமதி பெறுவது, அனுமதி விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து கொள்வது, அனுமதிக்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் பெற்று பதிவு செய்தல் போன்ற வசதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த செயலி மூலம் வேட்பாளர்களின் நேரம் மிச்சமாவதுடன், சரியான விவரங்களையும் பெற முடியும்.
அதேபோல் ‘சாக்ஷம்’ என்ற மற்றொரு செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சாக்ஷம் செயலியைப் பொறுத்தவரை மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்வதற்காக பிரத்யேகமாக தேர்தல் ஆணையத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதல்முறை வாக்களிக்க உள்ள இளம் மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்தால், இதில் உள்ள பெயர், முகவரி, செல்போன் எண், மாநிலம், மாவட்டம், தொகுதி உள்ளிட்ட விவரங்கள் கிடைத்துவிடும்.
வாக்குப்பதிவு தினத்தன்று மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு தேவையான சக்கர நாற்காலி உள்ளிட்ட வசதிகளை இதன்மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த செயலியில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு குரல்வழி உதவியும், கேட்கும் திறனற்ற மாற்றுத் திறனாளிக்கு பேசினால் எழுத்தாக பதிவாகும் வசதி போன்றவையும் உள்ளன.
இந்த செயலியில், வாக்குச்சாவடி மையம், அதன் அமைவிடம், அந்த வாக்குச்சாவடி மையத்தில் உள்ள வசதிகள், வாக்குப்பதிவு அலுவலர்களின் தொடர்பு எண்கள் இடம் பெற்றிருக்கும். மாற்றுத் திறனாளிகள் வாக்குப்பதிவின் போது சந்திக்கும் பிரச்சினைகளையும் இந்த செயலி வழி பதிவு செய்யும் வசதி உள்ளது.