நீலகிரி வேட்பாளர் ஆ.ராசா உள்ளிட்ட திமுகவினரிடம் தேர்தல் அதிகாரிகள், போலீஸ் மற்றும் பறக்கும்படையினர் மென்மையாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு கேரள மாநில எல்லை அருகே குன்னூரில் உள்ள சோதனை சாவடியில், தி.மு.க வேட்பாளர் ஆ.ராஜாவின் பிரச்சார ஊர்தியை சோதனை செய்வதில் மெத்தனம் இருப்பதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.
ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் மாவட்ட தேர்தல்
அதிகாரி, நீலகிரி மற்றும் செலவினப் பார்வையாளர்களால் சோதனைப் பணிகளில்
குளறுபடிகள் கண்டறியப்பட்டதால், பறக்கும் படைக்குழு தலைவி கீதா,
பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், பறக்கும் படைக்குழுவின் அனைத்து பணியாளர்களும் மாற்றப்பட்டுள்ளனர். இது குறித்து செலவினப் பார்வையாளர் சம்பவ இடத்திற்கு சென்று முழு விசாரணை நடத்தி புகைப்படக் கண்காணிப்பு குழுக்கள் பதிவு செய்த இரண்டு காணொளி காட்சிகளை பார்வையிட்டார். பத்திரிக்கை தரப்பு காணொளி மற்றும் புகைப்பட குழு காணொளி இரண்டும் சாதாரண மற்றும் மேலோட்டமான சோதனையைக் காட்டுகின்றன.
பிரச்சார ஊர்வலத்தில் இருந்த மற்ற வாகனங்கள் சோதனை செய்யப்படவில்லை. ஒரு முக்கிய வேட்பாளரிடம் காட்டப்பட்ட மென்மையான அணுகுமுறையை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டுள்ளது.
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்யும் பொருட்டு, இந்திய தேர்தல் ஆணையம் வழங்கிய தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.