மூன்றாவது முறையாக ஆட்சியமைப்பதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே தொடங்கி விட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கினார். அங்கு நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது :
மூன்றாவது முறையாக ஆட்சியமைப்பதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. அடுத்த 5 ஆண்டுகளுக்கான திட்டத்தை தயாரித்து வருகிறோம். முதல் 100 நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில், நீங்கள் வளர்ச்சியின் டிரெய்லரை மட்டுமே பார்த்தீர்கள். நாட்டின் வளர்ச்சியை அதிக தூரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அவர் கூறினார்.
2024 தேர்தல் ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கான தேர்தல் அல்ல. 2024 தேர்தல் வளர்ந்த இந்தியாவுக்கானது. 2024 தேர்தல் முடிவு நாட்டை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார வல்லரசாக மாற்றும் என்று பிரதமர் கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் தேசம் அடைந்துள்ள முன்னேற்றத்தை எடுத்துரைத்த பிரதமர் மோடி,இந்தியாவின் நேரம் வந்துவிட்டது என்றார்.
இந்தியாவில் நவீன கட்டமைப்புகள் வேகமாக உருவாக்கப்பட்டு வருகின்றன. இன்று இந்தியா உள்கட்டமைப்புகளை உருவாக்குவதில் வரலாறு காணாத முதலீடுகளை செய்து வருகிறது.இளைஞர்களுக்கு ஒவ்வொரு துறையிலும் புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.
நாட்டில் பெண்களின் சக்தி புதிய தீர்மானங்களுடன் முன்னோக்கி வருகிறது. இந்தியாவின் நம்பகத்தன்மை புதிய உச்சத்தில் உள்ளது. முழு உலகமும் இந்தியாவை பிரமிப்புடன் பார்க்கிறது என அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு ஏழையின் துக்கமும், வேதனையும் புரிகிறது. எனவே ஏழைகளின் கவலையை தீர்க்க திட்டங்களை வகுத்துள்ளேன். நாங்கள் ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தது மட்டுமல்லாமல், அவர்களுக்கு சுயமரியாதையையும் அளித்துள்ளோம் என்று பிரதமர் கூறினார்.
நாரி சக்தி மூலம் பெண்களை தொழில்முனைவோர் ஆக்கினோம். அவர்கள் சொந்தமாக தொழில் செய்கிறார்கள். 10 கோடி பெண்கள் சுயஉதவி குழுக்களில் இணைந்துள்ளனர். இது மோடியின் கனவாக இருந்தது.
உலகின் 11வது பெரிய பொருளாதாரமாக இந்தியா இருந்தபோது, இந்தியாவின் வறுமை விகிதம் உயர்ந்தது என்பதை உங்கள் அனைவருக்கும் நினைவூட்ட விரும்புகிறேன். இந்தியா 5வது பெரிய பொருளாதாரமாக மாறியபோது, 25 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையிலிருந்து வெளியே வந்தனர்.
நான் உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறேன். நாங்கள் 3வது பெரிய பொருளாதாரமாக மாறுவோம், வறுமை ஒழிக்கப்படுவது மட்டுமல்லாமல், ஒரு ‘புதிய நடுத்தர வர்க்கம்’ இந்தியாவின் வளர்ச்சிக்கு துணைபுரியும் என்றார்.
ஊழலுக்கு எதிரான போராட்டத்தை நாங்கள் தொடங்கினோம். மோடிக்கு தோல்வி பயம் வந்துவிடும் என்று நினைத்து இண்டி கூட்டணியை உருவாக்கினார்கள். ஆனால் இந்தியா எனது குடும்பம், நான் பயப்பட ஒன்றுமில்லை. இப்போது ஊழலில் ஈடுபட்டவர்கள் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் உள்ளனர். அவர்களுக்கு உச்சநீதிமன்றத்தில் கூட நிவாரணம் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார்.
இன்று, காங்கிரஸின் மற்றொரு தேசவிரோதச் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கச்சத்தீவு என்பது தமிழ்நாட்டில், இந்தியாவின் கடற்கரையோரம் இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையே உள்ள ஒரு தீவு இந்த தீவு தேசிய பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் மிகவும் முக்கியமானது.
இது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது. ஆனால் 4-5 தசாப்தங்களுக்கு முன்பு, இந்த தீவால் எந்த பயனும் இல்லை என்று கூறி காங்கிரஸ் அரசு தாரை வார்த்தது என்றும் பிரதமர் மோடி கூறினார்.