19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை 30 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில், வணிக மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை ஒவ்வொரு மாதமும் நிர்ணயிக்கப்படுகிறது. இதனை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
அந்த வகையில், மாதத்தின் முதல் நாளான இன்று விலை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டரின் விலை, 30 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னையில், வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டரின் விலை ரூ.1,930-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே நேரத்தில், வீட்டு பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமுமின்றி விற்பனையாகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர், மகளிர் தினத்தை முன்னிட்டு, வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலையைக் குறைத்து மத்திய அரசு அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.