அசாம் மாநிலம் கௌகாத்தியில், பலத்த காற்றுடன் நேற்று பெய்த கனமழையால், அங்குள்ள விமான நிலைய மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதனால், விமானங்கள் புறப்படுவதில், தாமதம் ஏற்பட்டது.
அசாம் மாநிலம் கௌகாத்தியில் லோக்பிரியா கோபிநாத் போர்டோலோய் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இப்பகுதியில், நேற்று பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது, விமான நிலையத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.
இதனால், விமான முனையத்தின் ஒரு பகுதிக்குள் தண்ணீர் புகுந்தது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததால், விமானங்கள் செல்வதில் தாமதம் ஏற்பட்டது. ஆறு விமானங்கள் வேறு இடங்களுக்கு திருப்பிவிடப்பட்டது.
மழைநீர் வெளியேறும் குழாய் நிரம்பி வழிந்தது மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது ஆகியவற்றின் காரணமாக, மேற்கூரை இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. மேற்கூரையின் ஒரு பகுதி காற்றில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.