பாஜக அரசின் முயற்சியால் வங்கி அமைப்பு அசுர வளர்ச்சி அடைந்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 1935 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி தனது செயல்பாடுகளைத் தொடங்கி இன்று 90 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனையொட்டி மும்பையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது, 2014ல், ரிசர்வ் வங்கியின் 80 ஆண்டு நிறைவையொட்டி நடந்த நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டபோது, நிலைமை மிகவும் வித்தியாசமானது. இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த வங்கித் துறையும் சிக்கல்கள் மற்றும் சவால்களுடன் போராடிக் கொண்டிருந்தது.
இந்தியாவின் வங்கி அமைப்பின் ஸ்திரத்தன்மை மற்றும் எதிர்காலம் குறித்து அனைவருக்கும் சந்தேகம் இருந்தது. நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு போதிய ஊக்கத்தை பொதுத்துறை வங்கிகளால் வழங்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது என தெரிவித்தார்.
ஆனால் இன்று உலகின் வலுவான மற்றும் நிலையான வங்கி அமைப்பாக இந்தியாவின் வங்கி அமைப்பு உள்ளது. வங்கித் துறையின் வளர்ச்சிக்கு பல்வேறு முயற்சிகள் எடுத்தோம். பொதுத்துறை வங்கிகளின் நிலைமையை மேம்படுத்த, பாஜக அரசு சுமார் 3.5 லட்சம் கோடி ரூபாய் மூலதனம் செய்தது என்றும் அவர் கூறினார்.
வங்கித் துறை, பொருளாதாரம் மற்றும் நாணயப் பரிமாற்றத்தின் புதிய சகாப்தத்தில் இந்தியா நுழைந்துள்ளது. UPI ஆனது உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட தளமாக மாறியுள்ளது. இது ஒவ்வொரு மாதமும் 1200 கோடி பரிவர்த்தனைகளை பதிவு செய்கிறது.
10 ஆண்டுகளில், வங்கித் துறை, பொருளாதாரம் மற்றும் நாணய பரிமாற்றம் ஆகியவற்றின் புதிய சகாப்தத்தில் நுழைந்துள்ளோம். டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் சாத்தியக்கூறுகள் குறித்து நாம் அதிகம் சிந்திக்க வேண்டும். ரொக்கமில்லா பொருளாதாரத்தின் சேனல்களைக் கண்காணித்து, நிதி உள்ளடக்கிய கலாச்சாரத்தை வளர்ப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
கடந்த தசாப்தத்தில் ரிசர்வ் வங்கி அடைந்துள்ள வளர்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார், அரசாங்கத்தின் முயற்சிகளில் நேர்மை மற்றும் நிலைத்தன்மையின் காரணமாக வங்கி அமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.