‘பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் ஜெய் ஸ்ரீராம் என கூறி வாக்காளர்கள் அமோக வரவேற்பு அளிப்பதாக உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் தொகுதி பாஜக வேட்பாளர் அருண் கோவில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19 தேதி தொடங்குகிறது. இதனையடுத்து பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் 80ஆம் ஆண்டுகளில் ராமானந்த் சாகரின் ராமாயணத்தில் ராமனாக நடித்த நடிகர் அருண் கோவிலை பாஜக களமிறக்கியுள்ளது.
இந்நிலையில் தனது தேர்தல் அனுபவம் குறித்து அருண் கோவில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, எனக்கு புதிய இன்னிங்ஸ் ஆரம்பம் ஆகிறது. இதன் மூலம் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய முடியும் என நினைக்கிறேன். திரைப்படத்தை விட தற்போது பொதுமக்களிடம் இருந்து அதிக அன்பை பெறுவதாக உணர்கிறேன். மக்கள் என்னைப் பார்த்ததும் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கோஷமிடுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
1987-ம் ஆண்டில் ராமானந்த் சாகர் தயாரிப்பில் உருவான ராமாயணம் தொடர், தூர்தர்ஷனில் வாரந்தோறும் ஒளிபரப்பானது. இதில் நடிகர் அருண் கோவில் ராமர் வேடத்தில் நடித்துள்ளார்.
நடிகை தீபிகா சீதையாகவும், குத்துச் சண்டை வீரர் தாரா சிங் அனுமனாகவும் நடித்திருந்தனர். இந்த தொடருக்கு நாடு முழுவதும் பலத்த வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் ஊரடங்கு காலத்தின் போது 33 ஆண்டுகளுக்குப் பின் ராமாயணம் தொடரை தூர்தர்ஷன் மீண்டும் ஒளிபரப்பியது குறிப்பிடத்தக்கது.