சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் இரண்டு ஈரான் தளபதிகள் உயிரிழந்துள்ளனர்.
சிரியா தலைநகர் டமாஸ்கசில் அமைந்துள்ள ஈரான் தூதரகம் மீது, இஸ்ரேல் திடீரென வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதில் தூதரகம் பலத்த சேதம் அடைந்துள்ளது.
இந்த தாக்குதலின் போது தூதரகத்திலிருந்த இரண்டு ஈரான் தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் முகமது ரீசா ஜஹேதி என்பவர்.
இவர் 2016 வரை சிரியாவில் பணியாற்றிய லெபனானில் குவாத்தை படையை வழிநடத்திச் சென்ற முக்கிய தளபதியாவர்.
மேலும் இதில், மூத்த தளபதிகளான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெஜா ஜகேடி மற்றும் மற்றொரு உயரதிகாரியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ஹதி ஹாஜி ரகீமி உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர். இதனை ஈரான் அரசும் உறுதி செய்துள்ளது.
எனினும், இஸ்ரேல் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியதில், ஈரான் புரட்சி படையினர் உள்பட 11 பேர் உயிரிழந்தனர் என்றும் ஈரான் தூதரகத்திற்கு அருகில் இருந்த கட்டிடம் ஒன்று தாக்கி அழிக்கப்பட்டது என்றும் பிரிட்டனை அடிப்படையாகக் கொண்ட சிரியாவின் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்து உள்ளது.
இந்த தாக்குதலில் 8 ஈரானியர்கள், 2 சிரியா நாட்டினர் மற்றும் லெபனான் நாட்டை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் வீரர்கள் என்றும் தாக்குதலில் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இதற்குப் பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் தூதர் ஹொசைன் அக்பாரி உறுதியளித்துள்ளார்.