தைவானின் கிழக்கு கடற்கரை பகுதியில், 7.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பத்தால், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தைவான் தலைநகர் தைப்பேவில், இந்திய நேரப்படி இன்று காலை 5.28 மணிக்கு பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானது. இந்த பூகம்பம் பூமிக்கடியில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக இந்திய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு, தைவானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த பூகம்பத்தால், கிழக்கு ஹுவாலியன் உட்பட பல்வேறு நகரங்களில், கட்டடங்கள் குலுங்கின. சில கட்டடங்கள் சரிந்து விழுந்தன. இதனால், அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
இந்த பூகம்பத்தால், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. , சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
பல்வேறு நகரங்களில், மின்சார சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. தைப்பேவில் ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இதனால், பல்வேறு நகரங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கி உள்ளது.
இதனைத்தொடர்ந்து, யோனகுனி கடலோரத்தில், சுமார் 30 செ.மீ. உயரத்திற்கு அலைகள் எழும்பியதாக கூறப்படுகிறது. மியாகோ மற்றும் யேயாம தீவுகளிலும் அலைகள் உயரே எழும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதேபோல், ஜப்பானின் ஒரு சில பகுதிகளிலும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சேதமடைந்த பகுதிகளில், மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.