மயிலாடுதுறை மாவட்டம், செம்மங்குளம் அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
செம்மங்குளம் அருகே இரவு நேரத்தில் சிறுத்தை நடமாடியதை சிலர் பார்த்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக, போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அப்பகுதியில், சிறுத்தை நடமாட்டம் தொடர்பான தகவல் காட்டுத்தீ போல் பரவியதால், அங்கு ஏராளமானோர் கூடினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்பட்ட பகுதிகளுக்கு, பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரித்தனர்.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில், இருந்த கால்தடங்களை வனத்துறையினர் ஆய்வு செய்து, சிறுத்தையின் கால் தடம் என்பதை உறுதி செய்தனர். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.
இதில், குடியிருப்புப் பகுதிகளில், சிறுத்தை ஒன்று சுற்றி திரிவது தொடர்பான காட்சிகள் பதிவாகி உள்ளது. தற்போது, இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. சிறுத்தை நடமாட்டத்தால், அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
விபரீதம் ஏற்படுவதற்கு முன்பு, சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர், அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு, அப்பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளிக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.