காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கவுரவ் வல்லப் அக்கட்சியில் இருந்து விலகுவதாக தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், காங்கிரஸ் கட்சி தவறான பாதையில் செல்கிறது. ஒருபுறம் ஜாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பைப் பற்றிப் பேசுகிறோம். மறுபுறம் ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தையும் கட்சி எதிர்ப்பதாகத் தெரிகிறது.
கட்சி ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே ஆதரிப்பவர் என்ற தவறான செய்தியை மக்களுக்கு வழங்குகிறது. இது காங்கிரசின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிரானது என தெரிவித்துள்ளார்.
சனாதனத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்பவோ, நாட்டை வளப்படுத்துபவர்களைத் துஷ்பிரயோகம் செய்யவோ என்னால் முடியாது. காங்கிரஸ் கட்சியின் அனைத்து பதவி மற்றும் முதன்மை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
கவுரவ் வல்லப் 2023ல் ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் உதய்பூர் தொகுதியில் போட்டியிட்டார். எனினும் பாஜக வேட்பாளரிடம் 32,000 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வி அடைந்தார்.