தைவானின் கிழக்கு கடற்கரை பகுதியில், 7.4 ரிக்டர் அளவில் நேற்று ஏற்பட்ட பூகம்பத்தால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. கட்டட இடிபாடுகளில், சிக்கி உள்ளவர்களை உயிருடன் மீட்கும் பணியில், மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தைவான் தலைநகர் தைப்பேவில், இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 5.28 மணிக்கு பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானது. இந்த பூகம்பம் பூமிக்கடியில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக இந்திய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் அதிர்வுகள் தைவான் மட்டுமின்றி, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டது.
சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு, தைவானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த பூகம்பத்தால், கிழக்கு ஹுவாலியன் உட்பட பல்வேறு நகரங்களில், கட்டடங்கள் குலுங்கின.
பல்வேறு கட்டடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. மேலும், சில கட்டடங்கள் சரிந்து விழுந்தன. அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் தற்போது பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு நகரங்களில், மின்சார சேவை துண்டிக்கப்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
சேதமடைந்த பகுதிகளில், மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. கட்டட இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை உயிருடன் மீட்கும் பணியில், மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஒரு சில பகுதிகளில், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப் பணிகள் நடைபெறுகிறது.
பூகம்பத்தால், 1,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாலும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களில் ஒரு சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாலும், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.