தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ படத்தின் கார் சேஸிங் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான அஜித் குமார் தற்போது விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் மகிழ் திருமேனி விடாமுயற்சி படத்தையும் இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் நடிகர் அஜித்துடன் நடிகர் ஆரவ், அர்ஜுன், ரெஜினா கசன்ரா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஆக்சன் திரில்லர் கதையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது.
இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வந்த நீரவ்ஷா படத்திலிருந்து வெளியேறி ஓம் பிரகாஷ் நியமிக்கப்பட்டார்.அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட விடாமுயற்சி படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.
இந்நிலையில் ‘விடாமுயற்சி’ படத்தின் கார் சேஸிங் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் , நடிகர் அஜித் உடன் நடிகர் ஆரவ் இடம்பெற்றுள்ளார். அஜித் மற்றும் ஆரவ் காரில் அதிவேகமாக செல்லும்போது கார் கவிழும் வகையில் அந்த காட்சி படமாக்கப்பட்டுள்ளது.
அதில் நடிகர் ஆரவ், கைகள் கட்டப்பட்ட நிலையில், தனது அருகே ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருக்கும் அஜித் அதிவேகத்தில் காரை ஓட்டுகிறார். வீடியோவின் இறுதியில் கார் நிலைதடுமாறி கவிழ்கிறது.
இது விபத்தாக நடந்ததா அல்லது படப்பிடிப்புக்காக காரை வேண்டுமென்றே அஜித் கவிழ்த்தாரா என்பது குறித்த தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்த காட்சிகள் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட காட்சிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Vidaamuyarchi filming
November 2023.#VidaaMuyarchi pic.twitter.com/M210ikLI5e— Suresh Chandra (@SureshChandraa) April 4, 2024