மின்சாரக் கட்டண உயர்விலிருந்து, விசைத்தறி தொழில் மீட்கப்படும், சோமனூரில் ஜவுளிப் பூங்கா அமைத்து, ஏற்றுமதி மேம்படுத்தப்படும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சூலூர் சட்டமன்றத் தொகுதியில், செம்மாண்டபாளையம், கிட்டாம்பாளையம், காடுவெட்டிபாளையம், பதுவம்பள்ளி, வாகராயம்பாளையம், மோப்பிரிபாளையம் கணியூர், ஊஞ்சப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளரும், பாஜக மாநிலத் தலைவருமான அண்ணாமலை, பொதுமக்கள் மத்தியில் மோடியின் தலைமையிலான அரசு செய்துள்ள சாதனைகளை எடுத்துரைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கூட்டத்தில் உரையாற்றிய அண்ணாமலை,
நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில், 400க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்பது உறுதி. நமது பிரதமர் அவர்களின் நலத்திட்டங்கள், முழுமையாக கோயம்புத்தூர் நாடாளுமன்ற மக்களைச் சென்றடைய, நாமும் அந்த 400 பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
கடந்த பத்து ஆண்டுகளாக, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி மக்களுக்கான திட்டங்கள் எதையும் கேட்டுப் பெறாமல், கோயம்புத்தூரின் வளர்ச்சியைத் தேக்க நிலையில் வைத்து விட்டார்கள்.
இதனால், மக்களுக்கான திட்டங்கள், மக்களை முழுமையாகச் சென்றடையவில்லை. தொகுதி குறித்துப் நாடாளுமன்றத்தில் ஒரு முறை கூடப் பேசாமல், ஐந்து ஆண்டுகளைக் கழித்திருக்கிறது திமுக கூட்டணியின் கம்யூனிஸ்ட் கட்சி.
தமிழகத்தில் ஆட்சிக்கு வந்து 33 மாதங்களில், முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி நிர்வாகிகள் என யாரும் செய்யாத நலத்திட்டங்களை, பாராளுமன்றத் தேர்தலில், திமுக, அதிமுகவுக்கு வாக்களித்தால் மட்டும் செய்து விடுவார்கள் என்பது பொய்யான வாக்குறுதி. நடக்கவிருப்பது, நாட்டுக்கான தேர்தல். இந்தத் தேர்தலில், திமுக மற்றும் அதிமுகவுக்கு வாக்களிப்பதால், மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை.
சூலூரைப் பொறுத்தவரை, முக்கியப் பிரச்சினையாக, விசைத்தறி மற்றும் விவசாயப் பிரச்சினைகள் இருக்கின்றன. மக்களின் அன்பைப் பெற்று, வரும் ஜூன் 4 அன்று பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், அடுத்த ஒரு ஆண்டில், ஜூன் 4, 2025க்குள், விசைத்தறிப் பிரச்சினைக்கு முழுமையான, நிரந்தரத் தீர்வு ஏற்படுத்துவேன் என்று பொதுமக்களுக்கு உறுதி அளிக்கிறேன்.
திமுக ஆட்சிக்கு வந்த 33 மாதங்களில், வரலாறு காணாத மின்சாரக் கட்டண உயர்வால், விசைத்தறித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைச் சரி செய்ய, மத்திய அரசின் பவர்டெக்ஸ் திட்டத்தை மீண்டும் கொண்டு வந்து, சூரிய ஒளி மின்சாரத் தகடு அமைக்க, 80% முதல் 95% வரை மானியம் வழங்கப்படும்.
இதன் மூலம், மின்சாரக் கட்டண உயர்விலிருந்து, விசைத்தறி தொழில் மீட்கப்படும். மேலும், சோமனூரில் ஜவுளிப் பூங்கா அமைத்து, ஏற்றுமதி மேம்படுத்தப்படும். நூல் விலையைக் கட்டுப்படுத்த, நூல் வங்கிச் செயல்பாடு முறைப்படுத்தப்படும். இவற்றின் மூலம், ஒரு ஆண்டில், விசைத்தறித் தொழில் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்படும்.
மேலும், விவசாயிகள் எதிர்கொள்ளும் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்க, பத்தாயிரம் கோடி ரூபாய் நிதியில், ஆனைமலை நல்லாறு திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும். அத்துடன், நொய்யல் நதியைச் சீரமைக்க ஒதுக்கப்பட்டுள்ள ரூ.990 கோடி நிதியில், நொய்யலின் கிளை நதியான கௌசிகா நதியும் சீரமைக்கப்பட்டு, இந்தப் பகுதிகளில் உள்ள தண்ணீர்ப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என்ற உறுதியை அளிக்கிறேன். மேலும், அனைத்து நீர்நிலைகளும் தூர்வாரப்பட்டு, தொகுதியின் குடிநீர்ப் பிரச்சினைக்கும் முழுமையான தீர்வு ஏற்படுத்தப்படும்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் உள்ள குடிசை வீடுகளில் வசிக்கும் சாமானிய மக்களுக்காக, மோடி வீடு திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுத்து வருகிறார்.
வீடுகள் கட்ட இடம் இல்லாத பொதுமக்களுக்கும் தரமான வீடுகள் கிடைக்க, அடுக்கு மாடி வீடுகள் கட்ட மத்திய அரசின் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது தவிர, அனைத்து வீடுகளுக்கும், குழாய் மூலம் சுத்தமான குடிநீர், ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல், மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் வழங்கப்படும்.
நமது குழந்தைகளின் தரமான கல்விக்காக, உலகத் தரத்திலான நவோதயா பள்ளிகள் கொண்டு வரப்பட்டு, உயர்தரக் கல்வி, நமது குழந்தைகளுக்கு இலவசமாகக் கிடைக்கச் செய்வோம் என்ற உறுதியை அளிக்கிறேன்.
முழுவதுமாக மத்திய அரசின் நிதியில் செயல்படும் நூறு நாள் வேலைத் திட்டத்தில், முறையான வேலைவாய்ப்பு வழங்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், கணியூர் பகுதிக்கு, பில்லூர் அணையிலிருந்து தண்ணீர் வழங்கவும், கணியூர், நகராட்சியோடு இணைக்கப்படாமல், ஊராட்சியாகத் தொடரவும், பொதுமக்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவை அத்தனையும், இத்தனை ஆண்டுகளாக சூலூர் பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள். இத்தனை ஆண்டுகளாகப் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்து திமுக, அதிமுக பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றத்தில் இவை குறித்துப் பேசியிருந்தால், நமக்கு எப்போதோ தீர்வு கிடைத்திருக்கும். ஆனால், பத்து ஆண்டுகளாக, இவற்றைப் பேசாமல் சும்மா இருந்துவிட்டு, தேர்தல் நேரத்தில் வந்து, மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து மீண்டும் ஏமாற்ற முயற்சிப்பார்கள். அவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். தொகுதி வளர்ச்சி பெற, தாமரை சின்னம் ஒன்றே தீர்வு.
தமிழகத்தில் அரசியல் மாற்றம் இப்போது இல்லை என்றால், எப்போதும் இல்லை. பண அரசியல், ஜாதி அரசியல், குடும்ப அரசியல் இவை அனைத்தும் ஒழிந்து, வளர்ச்சி அரசியல் நமது கோயம்புத்தூரில் இருந்து ஆரம்பிக்கட்டும்.
நமது பாரதப் பிரதமர் மோடி அவர்கள் பிரதமராக இருக்கும்போது, கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதியிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரைத் தேர்ந்தெடுத்து டெல்லிக்கு அனுப்பினால், நமது தொகுதி, பிரதமர் அவர்களின் நேரடிப் பார்வையில் வளர்ச்சி பெறும் என்பது உறுதி.
எனவே, நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு மீண்டும் வாக்களித்து, 400க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பொறுப்பேற்க தாமரை சின்னத்தில் மகிழ்ச்சியுடன் வாக்களிப்போம். நமது நாடு இன்னும் வலிமையாக, இன்னும் வேகமாக வளர்ச்சி பெற, முக்கியமான சீர்திருத்த முடிவுகளை மேற்கொள்ள, நமது பிரதமர் அவர்கள் கரங்களை வலுப்படுத்த, 400 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவனாக, உங்கள் வீட்டுப் பிள்ளை, உங்கள் சகோதரன் அண்ணாமலையாகிய எனக்கு, கட்சி வேறுபாடின்றி, தாமரை சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.