சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் அருகே, பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில், 3 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர். .
சத்தீஸ்கர், ஒடிசா, தெலுங்கானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு சில பகுதிகளில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இவர்களை ஒடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மாவோயிஸ்ட்டுகள் மறைந்திருந்து அவ்வப்போது, போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இதை அடுத்து பாதுகாப்புப் படையினர் பதிலடி தாக்குதல் நடத்துகின்றனர். இதில், இரு தரப்பிலும் உயிர் சேதங்கள் ஏற்படுகிறது.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் தெலுங்கானா எல்லை வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் பதுங்கி இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், தெலுங்கானா நக்சல் எதிர்ப்புப் படையான பிரேஹண்ட்ஸ் குழு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. இவர்களுடன் சத்தீஸ்கர் காவல்துறையினரின் குழுவும் இருந்தது.
அப்போது, அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்டுகள், அவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர். இதை அடுத்து, பதுகாப்புப் படையினரும் அதிரடியாக தாக்குதல் நடத்தினர்.
பூஜாரி கான்கேர் வனப்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில், 3 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர். பின்னர், அந்த இடத்தில் இருந்து இலகுரக இயந்திர துப்பாக்கி, ஏகே-47 உட்பட பல்வேறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
அங்கு மேலும் சில மாவோயிஸ்ட்டுகள் பதுங்கி இருக்கலாம் என்பதால், அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. இந்த வார தொடக்கத்தில், சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில், பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில், மூன்று பெண்கள் உட்பட குறைந்தது 13 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர்.