உத்தர பிரதேசத்தில் குழந்தையைத் தூக்க வந்த குரங்கிடம் இருந்து, தப்பித்துக் கொள்ள கூகுள் அலெக்சாவை நாயைப் போல குரைக்க வைத்து சமயோசிதமாக செயல்பட்ட சிறுமிக்கு, எதிர்காலத்தில் தனது நிறுவனத்தில் வேலை வாய்ப்பு தருவதாக, மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.
மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா, தனது சமூக வலைத்தளக் கணக்குகளில், ஆக்கப்பூர்வமான விஷயங்களை பதிவிடுவார். இவருடைய பதிவுகள் எப்போதும் தனிச் சிறப்பு வாய்ந்தது.
இவர் எளிய மனிதர்களின் சாதனைகளை ஊக்குவிக்கும் உயர் குணம் கொண்டவர். ஏழை குடும்பத்தில் பிறந்து சாதிக்கும் பலரை பாராட்டி, அவர்களை தன்னுடைய நிறுவனத்திலேயே பணிக்கு அமர்த்துவார்.
இந்த நிலையில், குழந்தையைத் தூக்க வந்த குரங்கிடம் இருந்து, சமயோசிதனமாக செயல்பட்டு, குழந்தையை காப்பாற்றிய 13 வயது சிறுமிக்கு, எதிர்காலத்தில் தனது நிறுவனத்தில் வேலை வாய்ப்பு தருவதாக, மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் அவாஸ் விகாஸ் என்ற பகுதியில், நிகிதா என்ற 13 வயது சிறுமி, தனது அக்கா குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தார். சிறுமி குழந்தையுடன் தனி அறையில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென சமையல் அறைக்குள் ஒரு குரங்கு நுழைந்துள்ளது. பின்னர், குழந்தையுடன் சிறுமி விளையாடிக் கொண்டிருந்த அறைக்குள் குரங்கு நுழைந்தது.
அந்த நேரத்தில், குடும்பத்தினர் வேறொரு அறையில் இருந்ததால், குரங்கு வந்ததை யாரும் கவனிக்கவில்லை. அப்போது, குழந்தையை நோக்கி குரங்கு சென்றுள்ளது.
அச்சமயத்தில், வீட்டின் பிரிட்ஜின் மேல் அலெக்சா சாதனம் இருப்பதைப் பார்த்த நிகிதா, அலெக்சா சாதனத்திடம் குரங்கை அச்சுறுத்தும் விதமாக சத்தம் எழுப்புமாறு கூறியுள்ளார். அதன்படி அலெக்சா நாய் குரைப்பது போன்ற ஒலியை எழுப்பியது. இதனால், பயந்து போன குரங்கு அறையை விட்டு வெளியே ஓடியது.
இந்த நிகழ்வில் சிறுமி தனது சமயோசித புத்தியால் குரங்கை விரட்டியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பல்வேறு தரப்பினரும் சிறுமியை பாராட்டி வருகின்றனர்.