டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், கைது செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா தாக்கல் செய்த ஜாமீன் மனுவை, டெல்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா, விஜய் நாயர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதில், தெலுங்கானாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தொழிலதிபர் குழுவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த குழு மூலம் ரூ.100 கோடி வரை சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த குழுவுக்கும் முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. இவருடைய வீட்டில் அமலாலக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சேர்ந்து சோதனை நடத்தினர். அதில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியது.
இதனையடுத்து, கடந்த 15-ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை அமலாக்கத்துறை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. கடந்த 26-ஆம் தேதி அவருடைய நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில், ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே, கவிதா இடைக்கால ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில், கவிதாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா, இடைக்கால ஜாமீன் கோரி கவிதா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.