டெல்லி சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கெஜ்ரிவால் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊழலுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி களமிறங்கியதை தொடர்ந்து அந்த கட்சியில் இணைந்தேன். ஆனால் அந்த கட்சி தலைவர்கள் ஊழல் நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளனர்.
அவர்களுடன் இணைந்து பணியாற்ற முடியாது. எனவே பதவியை ராஜினாமா செய்தேன் என தெரிவித்துள்ளார்.
2020 டெல்லி சட்டமன்றத் தேர்தலில், ஆனந்த் படேல் நகர் தொகுதியில் இருந்து ராஜ்குமார் ஆனந்த் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அவர் நவம்பர் 2022 ஆம் ஆண்டு கேபினட் அமைச்சரானார்.
ராஜ்குமார் ஆனந்த் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, எஸ்சி மற்றும் எஸ்டி, நிலம் மற்றும் கட்டிடம், கூட்டுறவு மற்றும் குருத்வாரா தேர்தல் துறைகளின் கூடுதல் பொறுப்பையும் அவர் கவனித்து வந்தார்.