விளம்பரப் பலகைகள், பேனர்கள், சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பொருட்களில், அச்சகம் மற்றும் வெளியீட்டாளர் பெயர் இடம்பெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி, ஜூன் 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 7 கட்டங்களாக நடத்தப்படும் தேர்தலில், பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. விளம்பரப் பலகைகள், பேனர்கள், சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் மூலம் அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் விளம்பரம் செய்து வருகின்றனர்.
ஆனால், இந்த விளம்பரங்களில், இவற்றை அச்சிட்ட அச்சகத்தின் பெயரோ, வெளியீட்டாளரின் பெயரோ குறிப்பிடப்படுவதில்லை என்ற புகார்கள் எழுந்தன.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. அதன் அடிப்படையில், புதிய உத்தரவு ஒன்றை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது.
அதில் கூறியிருப்பதாவது, விளம்பரப் பலகைகள், பேனர்கள், சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பொருட்களை, அச்சகம் மற்றும் வெளியீட்டாளர் பெயர் இல்லாமல் வெளியிட மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 127ஏ தடை விதிக்கிறது. எனவே, அந்த விவரங்கள் இடம்பெற வேண்டும்.
அப்போதுதான், தேர்தல் பிரசாரத்தில் வெளிப்படைத்தன்மையை உருவாக்க முடியும். தேர்தல் செலவுகளை ஒழுங்கு செய்ய முடியும். பேனரில் உள்ள கருத்துகள், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிராக இருப்பின், அதற்கான பொறுப்பை சுமத்த முடியும்.
அரசியல் விளம்பரங்கள் தொடர்பாக சமீபத்தில் டெல்லி மாநகராட்சி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஒரு வேட்பாளர் அல்லது கட்சிக்கு ஆதரவாக விளம்பரம் வெளியிடலாம். ஆனால், பிற வேட்பாளருக்கு எதிராக விளம்பரம் வெளியிட தடை உள்ளது.
விளம்பரங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் பெற்றவரின் ஒப்புதலுக்கு பிறகே விளம்பரங்கள் வெளியிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.