அரியானா மாநிலம் நர்னால் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பள்ளி வாகனம், மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில், 6 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.
அரியானா மாநிலம் நர்னால் மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் வாகனம் எப்போதும் போல் மாணவர்களை ஏற்றிக் கொண்டு பள்ளியை நோக்கி சென்று கொண்டிருந்தது.
உன்ஹானி கிராமம் வழியாக வாகனம் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனை அடுத்து, தாறுமாறாக சென்ற வாகனம் மரத்தின் மோதி விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர், காயமடைந்த மாணவர்களை அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கோர விபத்தில் 6 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும், சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது, முதற்கட்ட விசாரணையில் ஓட்டுநர் மதுபோதையில் வாகனம் ஓட்டியது தெரிய வந்துள்ளது. மேலும், இன்று பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அளித்துள்ள நிலையில், இந்த தனியார் பள்ளி இயங்கியதாக கூறப்படுகிறது. பள்ளி வாகனத்திற்கான உரிமம் 6 ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியானது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று கூறினார்.