கச்சத்தீவில் யாரும் வசிக்கவில்லை என்பதற்காக இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதா என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் கச்சத்தீவில் யாரும் வசித்தார்களா என கேள்வி எழுப்பியதை சுட்டிக்காட்டினார்.
யாரும் வசிக்கவில்லை என்றால், நீங்கள் அதனை அடுத்த நாட்டிற்கு கொடுப்பீர்கள் என்று அர்த்தமா? என பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.
நாட்டில் மக்கள் வசிக்காத இடம் வெறும் நிலம் தான் என காங்கிரஸ் தலைவர்கள் நினைக்கின்றனர்.இங்கு யாரும் வசிக்கவில்லை என்று கூறி, ராஜஸ்தானின் மக்கள் வசிக்காத நிலத்தையும் காங்கிரசால் கொடுக்க முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
அவர்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் பாதுகாப்பு எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
கச்சத்தீவை காங்கிரசும், திமுகவும் இலங்கைக்கு தாரை வார்த்ததாக ஆர்டிஐ ஆவணங்கள் மூலம் பாஜக குற்றம்சாட்டியுள்ளது. கச்சத்தீவில் யாரும் வசித்தார்களா என திக்விஜய்சிங் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.