ஊழல் ஒழிப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், விசாரணை அமைப்புகளின் நடவடிக்கை நிறுத்தப்படாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஹிந்துஸ்தான் பத்திரிக்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:
அடுத்த வாரம் தொடங்கும் பொதுத் தேர்தலில் பாஜக 3-வது முறையாக வெற்றி பெறும். ஊழலை ஒழிப்பது எங்கள் அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமை. ஊழல்வாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஊழல் எந்த அளவில் இருந்தாலும், அது நாட்டு மக்களைப் பாதிக்கிறது. மக்கள் நலனுக்காக பணத்தை திருடுபவர்களுக்கு எதிரான நடவடிக்கை முடிவுக்கு வராது.
அமலாக்கத்துறை விசாரிக்கும் வழக்குகளில் 3% மட்டுமே அரசியலுடன் தொடர்புடையது என்று கூறினார். பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களில் கூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. 2014-ல் ஆட்சி அமைத்தவுடன் ஊழலை ஒழிக்க தனது அரசு நடவடிக்கை எடுத்ததாக மோடி கூறினார்.
ஊழல் அதிகாரிகளை கைது செய்துள்ளோம். சட்டவிரோத நிதியுதவியுடன் தொடர்புடைய குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை பறிமுதல் செய்துள்ளதாகவும் பிரதமர் கூறினார்.
2014 ஆம் ஆண்டுக்கு முன்,அமலாக்கத்துறை ரூ. 5,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை பறிமுதல் செய்தது, அதேசமயம் கடந்த 10 ஆண்டுகளில் அந்தத் தொகை ரூ. 1 லட்சம் கோடிக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. 2014 க்கு முன், ரொக்கமாக ரூ. 34 லட்சம் மட்டுமே அமலாக்கத்துறையால் கைப்பற்றப்பட்டது.
அதே நேரத்தில் எங்கள் அரசாங்கத்தின் கீழ் ரூ.2,200 கோடிக்கும் அதிகமான ரொக்கத்தை கைப்பற்றியுள்ளது. இந்த பணத்தை ஏழைகளுக்கான நலத்திட்டங்களில் முதலீடு செய்திருந்தால், எத்தனை பேர் பயனடைந்திருப்பார்கள், இளைஞர்களுக்கு எத்தனை வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருக்க முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள். அதனால் பல புதிய உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி இருக்கலாம் என்றார்.
பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க வேண்டும் என்ற உற்சாகம் மக்களிடையே இருக்கிறது. ஒரு அரசாங்கத்தை 10 ஆண்டுகளுக்குப் பிறகும், மக்கள் அதே உற்சாகத்துடனும் முழுமையான ஆர்வத்துடனும் அவர்களை மீண்டும் அதிகாரத்திற்குத் தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதை, உலகில் நீங்கள் கடைசியாக எப்போது பார்த்தீர்கள்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
எதிர்க்கட்சிகளும் கூட, என்.டி.ஏ அரசு மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று நம்புகிறது, அதனால்தான் பல எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட தேர்தல் பிரச்சாரங்களில் இருந்து பின்வாங்குகிறார்கள் என பிரதமர் மோடி தெரிவித்தார்.