தென்னாடே தன்னுடைய பழம் பதியாக கொண்டிருந்தாலும், எந்நாட்டவருக்கும் இறைவனாக விளங்குகின்ற சிவபெருமான் எட்டு வீரச் செயல்கள் நிகழ்த்திய தலங்கள் அட்ட வீரட்டத்தலங்களாக சிறப்புற்று திகழ்கின்றன. அந்த அட்ட வீரட்டத் தலங்களில் சிறப்பானதாக விளங்குகின்ற தலமே ‘திருவிற்குடி’.
சாகாவரம் பெற பிரம்மாவை நோக்கி கடும் தவம் செய்த சலந்தரனுக்கு, அவ்வாறு வரம் தர முடியாது என்ற பிரம்மாவிடம் சலந்தரன் “கற்பில் சிறந்த என் மனைவி பிருந்தை எப்போது மனதளவில் கெடுகிறாளோ அப்போது எனக்கு அழிவு வரட்டும்” என்னும் வரத்தை வலிய வாங்கி கொண்டான்.
உடல் வலிமைமிக்க சலந்தரன் தான் பெற்ற வரத்தின் காரணமாக அதிக ஆணவம் கொண்டு, தேவர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் மிகுந்த துன்பத்தைக் கொடுத்துவந்தான்.
தேவர்களெல்லாம் கயிலைகக்குச் சென்று, சிவபெருமானிடம் சரண் அடைந்தனர். சினம் கொண்ட சலந்தரன் போர்க்கோலம் பூண்டு கயிலை மலையை அடைந்தான்.
சிவபெருமான் ஒரு கிழ அந்தணர் வேடத்தில் அவன் முன்பு தோன்றினார். அதற்கு முன் திருமாலை சலந்தரன் வடிவில் அவன் மனைவி பிருந்தை முன் செல்லும்படி கூறினார். கணவன் தான் என வீட்டிற்குள் அனுமதித்தாள் பிருந்தை. நொடிப் பொழுது, வேறொருவரைத் தன் கணவன் என நினைத்ததால் அவளது மனம் களங்கமடைந்தது.
இந்த நேரத்தில், சலந்தரனிடம் ஒரு சிறிய செயலை செய்ய முடியுமா என்று சிவபெருமான் கேட்டார். தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்று ஆணவத்துடன் கூறிய சலந்தரனிடம் சிவபெருமன் தனது காற் பெருவிரலால் மண்ணில் ஒரு வட்டமிட்டு, அந்த வட்டத்தைப் பெயர்த்தெடுத்து தலை மேல் தாங்கி நில் என்று கூறினார்.
பெரு முயற்சிக்குப் பின் அந்த வட்டத்தைப் பெயர்த்தெடுத்து தன் தலை மேல் தாங்கினான். மனைவி பிருந்தையின் மனம் சிறிது நேரம் களங்கப்பட்டதால், அந்த வட்டச் சக்கரம் வெகு வேகமாக சுற்றத் தொடங்கி, சலந்தரன் உடம்பை இருகூறாகப் பிளந்தது. சலந்தரனின் ஆணவத்தைச் சக்கரத்தால் சிவபெருமான் அழித்து வீரச் செயல் செய்த இடமே ‘ திருவிற்குடி’
திருக்கோயிலின் முன்னால் சக்கரதீர்த்தமும்,பின்புறம் சங்கு தீர்த்தமும்அமையப்பெற்று, துளசியே தலமரமாக விளங்க, ஐந்து நிலைகளுடன் ராஜகோபுரம் கம்பீரமாக விளங்கும் இத்திருக்கோவிலில் அருள்மிகு ஏலவார்குழலி உடனுறை வீரட்டானேஸ்வரர் அருள் புரிகிறார்.
சலந்தரனைச் சம்ஹரித்த மூர்த்தியின் உற்சவத்திருமேனி அழகான ஐம்பொன் திருமேனியாக திகழ்கிறது. உற்சவர் வலது உள்ளங்கையில் சக்கரம் ஏந்தியும், ஏனைய கரங்களில் மான்மழு ஏந்தியும், இன்னொரு திருக்கரத்தில் ஆயுத முத்திரை தாங்கியும் வருவோர்க்கெல்லாம் அருள் வழங்குகின்றார். திருமால் இத்தலத்து இறைவனை வழிபட்ட இலிங்கத் திருமேனி தனிக் கோவிலாக உள்ளது.
திருவிற் குடி வீரட்டானேஸ்வரைப் போற்றி, திருஞானசம்பந்தப் பெருமான் ஒரு பதிகமும் , அப்பர் சுவாமிகள் 2 பதிகமும், அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்களும் தந்துள்ளனர்.
“வடிகொள் மேனியர் வானமாமதியினர் நதியினர் மதுவார்ந்த
கடிகொள் கொன்றையஞ் சடையினர் கொடியினருடை புலியதளார்ப்பர்
விடையதேறும் எம்மான் அமர்ந்தினிதுறை விற்குடி வீரட்டம்
அடியராகி நின்றேத்தி வல்லார்தமை அருவினை அடையாவே! என்று தேவாரப் பதிகத்தில் திருஞானசம்பந்தர் இத்தலத்திற்குரிய தனது இப்பதிகத்தை தினந்தோறும் ஓதுபவர்களை வினைகள் அடையாது என்றும், அவர்கள் வாழ்க்கையில் வருத்தம் இல்லாமல் இருப்பார்கள் என்றும், தீவினைகள், இடர்கள் அணுகாது என்றும், துன்பம் என்ற நோய் அணுகாது இருப்பார்கள் என்றும் உறுதிப்பட பாடுகிறார் .
எனவே இத்தலத்து வீரட்டானேஸ்வரை மனமுருகி வணங்கினால், நம்மை சுற்றி இருக்கும் தீயசக்திகள் விலகி ஓடும். நாம் இருக்கின்ற இடத்தில் வாஸ்து தோஷங்கள் நீங்கும். வாழ்வில் எப்போதும் வெற்றியே தொடரும்.