ஜாலியன் வாலாபாக் படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு பொதுமக்கள் சார்பாக அஞ்சலி செலுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ஜாலியன்வாலா பாக் என்று அழைக்கப்படும் ஒரு திறந்தவெளியில் நிராயுதபாணியாக நின்ற சுதந்திர போராட்ட வீரர்கள் மீது பிரிட்டிஷ் துருப்புகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர்.
இந்நிலையில் உயிரிழந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில், பாதிக்கப்பட்டவர்களின் ஈடு இணையற்ற தைரியத்தையும் தியாகத்தையும் வெளிப்படுத்தும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள எனது குடும்ப உறுப்பினர்கள் சார்பாக, ஜாலியன் வாலாபாக் படுகொலையின் போது உயிரிழந்த அனைத்து துணிச்சலான தியாகிகளுக்கும் எனது இதயப்பூர்வமான அஞ்சலியை செலுத்துவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.