பெங்களூரூ ஹோட்டல் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர், கொல்கத்தாவில் உள்ள லாட்ஜில் தங்கி இருந்தது தொடர்பான சிசிடிவி வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரூ ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி பகுதியில் பிரபல ராமேஸ்வரம் கபே ஹோட்டல் செயல்பட்டு வருகிறது.இந்த ஹோட்டலில் மார்ச முதல் தேதி பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து இரு குண்டுகள் வெடித்தன.
இதில் அங்கு உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த 10 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டதாக இருவரை கொல்கத்தா அருகே என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 40 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்த அத்புல் மதீன் தாஹா மற்றும் முசாவிர் ஹுசைன் ஷாஸேப் ஆகியோரை கொல்கத்தாவில் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பின்னர் கொல்கத்தாவில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் அவர்கள் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 10 நாளில் போலீஸ் காவலில் என்ஐஏ நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், அவர்கள் இருவரும் மார்ச் 25 ஆம் தேதி முதல் மார்ச் 28 வரை போலி அடையாள அட்டைகளை பயன்படுத்தி கொல்கத்தாவில் உள்ள ட்ரீம் விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்துள்ளனர். அவர்கள் வரவேற்பு அறையில் விசாரிப்பது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.